April 28, 2026

டிரம்ப் மீது பலாத்காரம், குழந்தை வன்கொடுமை குற்றச்சாட்டு….

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சி தொடர்பான அறிக்கையில் வெளியான தகவல்களை ெசய்தியாளர் கேள்வியாக கேட்டதால், டிரம்ப் கடும் கோபமடைந்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது கலிபோர்னியாவின் டொரன்ஸ் பகுதியைச் சேர்ந்த கோல் தாமஸ் ஆலன் (31) என்ற ஆசிரியர், பாதுகாப்பு வளையத்தை மீறி துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளுக்கும் அவருக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு அதிகாரி அணிந்திருந்த குண்டு துளைக்காத கவசத்தில் தோட்டா பாய்ந்தது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேடையில் அமர்ந்திருந்த அதிபர் டிரம்ப்பை பாதுகாப்பு அதிகாரிகள் சில விநாடிகளில் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த சம்பவத்தின் போது டிரம்ப் லேசாக தடுமாறினாலும், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதேபோல் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அமைச்சர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எப்.பி.ஐ., அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட நபர் தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து ‘நட்பு ரீதியான கொலையாளி’ என்ற வாசகங்கள் அடங்கிய அறிக்கையை போலீசார் கைப்பற்றினர். அதில் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய இலக்கு பட்டியல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஈரான் போர் தொடர்பான விமர்சனங்களும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் ‘60 மினிட்ஸ்’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேட்டியளித்தார். கொலையாளி ஆலன் எழுதிய அறிக்கையை வாசித்த செய்தியாளர் நோரா ஓ’டோனலை, ‘நீங்கள் ஒரு அவமானம்’ என்று டிரம்ப் சாடினார். அந்த கடித அறிக்கையில் டிரம்ப்பை ‘பாலியல் பலாத்காரம் செய்பவர், குழந்தை வன்கொடுமையாளர் மற்றும் துரோகி’ என்று ஆலன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘நீங்கள் மிகவும் மோசமான மனிதர்கள். நான் எந்தப் பாலியல் பலாத்காரமும் செய்யவில்லை. இதுபோன்ற கீழ்த்தரமான அறிக்கையை வாசிப்பதற்கு நிருபராகிய நீங்கள் வெட்கப்படவேண்டும்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரின் வெறுப்புப் பேச்சு தான் இதுபோன்ற தீவிரவாதச் செயல்களுக்கு வழிவகுக்கிறது. இது நாட்டுக்கே மிகவும் ஆபத்தானது. எனக்கும் எப்ஸ்டினுக்கும் (மறைந்த பாலியல் குற்றவாளி) எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கனவே இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டேன்’ என்று ஆவேசமாகப்

பேசினார். தாக்குதல் நடத்திய ஆலன், தான் இந்தச் செயலை செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே தனது குடும்பத்தினருக்கு அந்த தகவலை அனுப்பியுள்ளார். இது குறித்து அவரது சகோதரர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தும், அவர்கள் போலீஸ் அதிகாரிகளை எச்சரிக்கத் தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். ஆலன் ‘தி வைட் அவேக்ஸ்’ என்ற குழுவைச் சேர்ந்தவர் என்பதும், ‘மன்னர்கள் வேண்டாம்’ என்ற போராட்டத்தில் பங்கேற்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.