September 10, 2026

பண்ருட்டி: டிராக்டர் மீது லோடு வாகனம் மோதி மரக்கட்டைகள் சரிந்து 4 தொழிலாளர்கள் பலி

பண்ருட்டி அருகே இன்று அதிகாலை மரக்கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டர் மீது லோடு வாகனம் மோதியதில், மரக்கட்டைகள் சரிந்து 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு டிராக்டர் நெய்வேலியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால், குறிஞ்சிப்பாடி தாலுகா ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 11 பேர் லோடு வாகனத்தில் கூலி வேலைக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, பணிக்கன்குப்பம் சாலை இறக்கத்தில் லோடு வாகனம் டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் இருந்த மரக்கட்டைகள் லோடு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளிகள் மீது சரிந்தது. இந்த இடுபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காடாம்புலியூர் போலீசார் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆயிப்பேட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (60), ராணி (60) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 10 பேர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு, ஆயிப்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி (60), வெங்கடாம்பேட்டை சேர்ந்த சத்யா (32) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

You may have missed