May 3, 2026

திருப்பரங்குன்றம் அருகே 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை! உடலை நடு ரோட்டில் வீசிய கொடூரம்…

மதுரை திருப்பரங்குன்றம் அருகே 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரை நடுரோட்டில் வீசி சென்றுள்ள கொடூரம் நடந்துள்ளது. மற்றொருவர் அடையாளம் தெரியாதவாறு பயங்கர ஆயுதங்களால் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சம்பக்குளம் விலக்கு கப்பலூர் – மதுரை சுற்றுச்சாலை பகுதியில் ஒரு இளைஞர் உடல் சிதைக்கப்பட்ட நிலையில், கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரணையில், சாலை விபத்தில் இறந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால்,அந்த இளைஞரின் உடலில் வெட்டுகாயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொலை செய்து உடலை சாலையில் வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நிலையூர் – சம்பக்குளம் அருகே ஒரு பாறையில் அடையாளம் தெரியாதவாறு 30 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்று ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்று இருப்பது திருப்பரங்குன்றத்தில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் ஒரே கும்பல் கொலை செய்ததா? கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்டவர்கள் யார் ? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களா அல்லது வெளியூரில் இருந்து கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.