பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் தவெகவினர் மது அருந்தி நடனமாடி அட்ராசிட்டி செய்தது, சுற்றுலாப் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று 50 நாட்களை கடந்த நிலையில், அக்கட்சியினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைச்சாலையில் தவெகவினர் மது அருந்தி நடனமாடி அட்ராசிட்டி செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழநியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் மலைச்சாலையில் தேக்கந்தோட்டம் என்னும் பகுதியில் எல்லைக் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தவெகவினர் சார்பில் கிடாவெட்டு விழா நடைபெற்றது.
இதில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் கார்த்திக்ராஜன், பழநி தொகுதி வேட்பாளராக மனுதாக்கல் செய்த பழனி பாலன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், கோயிலை ஒட்டிய கொடைக்கானல் மலைச்சாலை ஓரத்தில் தவெக நிர்வாகிகள் அமர்ந்து மது அருந்துவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சாலையோரம் அமர்ந்து மது அருந்துபவர்கள் வீசும் காலி பாட்டில்கள் வனவிலங்குகளின் கால்களை பதம் பார்க்கின்றன. இவற்றால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்த வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், வனத்துறை சோதனைச்சாவடி அருகே, விதிமுறைகளை மீறி தவெகவினர் அமர்ந்து மது அருந்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், மது அருந்திவிட்டு தவெகவினர் நடனமாடியதைப் பார்த்து, அந்த வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகள் முகஞ்சுழித்தனர். எனவே, விதிமுறைகளை மீறி மலைச்சாலையில் அமர்ந்து மது அருந்திய தவெக நிர்வாகிகள் மீது வனத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
கிணத்துக்கடவு ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் வாலிபரின் சடலம்…
மது அருந்திவிட்டு அவமானப்படுத்திய கணவரை ஆத்திரத்தில் கொளுத்திகொலை செய்த மனைவி…
கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் மாயம்: கலெக்டரிடம் 4 கிராம மக்கள் புகார்…