கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் மாயம்: கலெக்டரிடம் 4 கிராம மக்கள் புகார்…

ராமநாதபுரம்: கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமானதாகவும், அவற்றை மீட்டுத் தரக்கோரி 4 கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு கிராம மக்கள், விவசாயிகள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். ஆனால், அடமானம் வைக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமானதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இந்நிலையில், எஸ்.கொடிக்குளம், கோரைக்குளம், சேமனூர், உரத்தூர் ஆகிய 4 கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் புகார் மனு அளித்தனர்.

எஸ்.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், கிராம பெண்கள் என 400க்கும் மேற்பட்டோர் அவசரத் தேவைக்காக ஒரு பவுன் முதல் 10 பவுன் வரை தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றோம். உரிய காலத்தில் நகைக்கான வட்டி, அசல் தொகையை திருப்பிச் செலுத்திவிட்டோம். ஆனால், இதற்கான உரிய ரசீது ஏதும் தரப்படவில்லை. அடகு வைத்த நகையையும் திருப்பித் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்து கூட்டுறவு வங்கி செயலாளர் சிவபிரபு மீது மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்தோம். இதன்பேரில் தனி அதிகாரி ஒருவர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நேரில் வந்து நகை லாக்கர், ஆவணங்களை ஆய்வு செய்தார்.

மேலும், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், வங்கி செயலாளர் சிவபிரபு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், அடகுவைத்த நகைகள் இதுவரை திருப்பி தரப்படவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அடமானம் வைத்த நகைகளை மீட்டுத்தர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.