May 7, 2026

விஜயை ஆட்சியிலில் அமர்த்துங்கள்! – தம்பி ராமையா ஆளுநருக்கு வேண்டுகோள்!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இன்னும் தேவைப்படும் பெரும்பான்மைக்காக முயற்சிகளை எடுத்து வருகிறார் விஜய். அவர் ஆட்சியமைக்க பொரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும் இயக்குநருமான தம்பி ராமைய்யா.

அந்த வீடியோவில் “கேரள ஆளுநர் மற்றும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ஐயா அவர்களுடைய பாதம் தொட்டு நான் வணங்குகிறேன். நீங்கள் மிகப்பெரிய அறிவாற்றல் ஆளுமை கொண்டவர் என்பதால் தான் இந்த பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் எந்தக் கட்சியையும் சாராதவன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீது மட்டும் பக்தி கொண்டவன். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை தளபதி விஜய் அவர்கள் வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 2 கோடி பேர் அவருக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர்கள் தவிர்த்து ஓட்டுரிமை அற்ற, மாணவ மாணவிகள், எல்லா குடும்பங்களிலும் இருக்கும் பேத்தி பேரனின் ஆசையும் இருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று நாள் நிகழ்வு என்பது, தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளை, மாணாக்க செல்வங்களை என்னை போன்ற நிறைய பேரின் பேரன் பேத்திகளை மனம் கலங்க செய்திருக்கிறது. எல்லோர் வீட்டிலும் ஒரே கூக்குரல். `எப்போ வருவாங்க? எப்போ பதவி ஏற்பாங்க?’ என ஒரு இனம் புரியாத தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, மன சஞ்சலத்தில் இருக்கிறார்கள். 113-ஐ காண்பித்துவிட்டார்கள், 5-ஐ கூட தூக்கி போடுங்கள், 108 இருக்கிறதே ஐயா. தம்பி விஜயை அழையுங்கள் ஐயா. அவர் கேட்கும் அவகாசத்தை கொடுங்கள். அவரால் நிரூபிக்க முடிந்தால் ஆட்சி தொடரட்டும். நிரூபிக்கவில்லை என்றால் சட்டப்படி பதவி போய்விடும். இன்னொரு தேர்தல் வைத்து வேறு ஒருவர் வரட்டும். ஓட்டுரிமை அற்ற மழலை செல்வங்கள் அறியாமையில் இருப்பவர்கள், இருந்துவிட்டு போகட்டும். அவர்களின் பார்வையில் இருந்து கேட்கிறேன், அர்லேகர் ஐயா `அடுத்த எம் ஜி ஆர் ஆகிவிட்ட தம்பி விஜயை அழைத்து ஆட்சி கட்டிலில் அமர வையுங்கள்” எனக் கூறியுள்ளார் தம்பி ராமையா