வீடு புகுந்து தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடி தப்பிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அசோக் நகர், இந்திரா காலனி 4-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பிரபு சீனிவாஸ் (53). இவரது வீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், அவர் அண்ணா நகரில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி வந்தார்.
கடந்த 26-ம் தேதி மாலை புனரமைப்பு பணிகளை முடித்து தொழிலாளர்கள் சென்ற பின், காலை மீண்டும் பணிக்கு வந்த தொழிலாளர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 40 கிராம் எடையுள்ள கவரிங் ஆரம், செல்போன் மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 6 பித்தளை பைப்புகள், குழாய்கள் ஆகியவை மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபு சீனிவாஸ் குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பிரபு சீனிவாஸ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது வடபழனி ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (20), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சதீஸ் குமார் (20) என்பது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாக நள்ளிரவில் உள்ளே புகுந்து தங்க நகை என நினைத்து கவரிங் நகையை திருடியதும், போகும்போது செல்போன் மற்றும் பித்தளை பைப்புகளை திருடிச் சென்றதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

More Stories
திரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி தந்தாலும் ஆச்சரியமில்லை: ஆர்பி உதயகுமார் …
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தீ; வைக்கோல் கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு;
குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு 37 பவுன் தங்கக்கிரீடம் காணிக்கை…