September 19, 2026

வேளாங்கண்ணி பேராலயத்தில் த.வெ.க தொண்டர்கள் குவிந்தனர்: விஜய் வருகைக்காக அதிகாலை முதல் காத்திருப்பு

வேளாங்கண்ணி: தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் தனது வெற்றிக்காக அக்கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மிக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று வேளாங்கண்ணி மற்றும் நாகூர் பகுதிகளில் வழிபாடு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியானது. இதன் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.

வெற்றிக்காக ஆன்மிகப் பயணம்: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அக்கட்சியின் வெற்றி மற்றும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி கிடைக்க வேண்டி விஜய் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலுடன் சாமி தரிசனம் செய்த அவர், அதனைத் தொடர்ந்து ஷீரடி சாய்பாபா கோயிலிலும் வழிபாடு நடத்தினார்.

வேளாங்கண்ணியில் திரண்ட தொண்டர்கள்: இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையான இன்று நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மற்றும் நாகூர் ஆண்டவர் தர்கா ஆகியவற்றில் விஜய் வழிபாடு நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து, பின்னர் அங்கிருந்து காரில் வேளாங்கண்ணி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தத் தகவலையறிந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், அதிகாலை 3 மணி முதலே வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் குவியத் தொடங்கினர். இருப்பினும், காலை வரை அவர் வராததால் காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

வாக்கு எண்ணிக்கை ஆலோசனை: இதற்கிடையே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணிகள் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய அவரது ஆன்மிகப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.