September 10, 2026

கீழக்கரை அருகே ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்…

கீழக்கரை அருகே, ஏர்வாடி தர்காவில் சமூக சந்தனக்கூடு திருவிழா இன்று அதிகாலை யானை, குதிரை ஊர்வலத்துடன் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே, ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹிது ஒலியுல்லா தர்ஹாவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஏப்.28ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு குதிரை, யானை ஊர்வலம், தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கைகளுடன் அரைத்த சந்தனம் எடுத்து வரும் சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கி நகர் முழுவதும் சுற்றி வந்து இன்று காலை 5 மணியளவில் தர்ஹாவை வந்தடைந்தது. அங்கு உலக அமைதி, ஒற்றுமை வேண்டி ராமநாதபுரம் மாவட்ட காஜி சலாஹூதீன் ஆலிம் துஆ (பிரார்த்தனை) செய்தார். காலை 5.30 மணி அளவில் மகானில் மக்பராவில் (சமாதியில்) சந்தனம் பூசப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. சந்தனக்கூடு விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை தலைவர் அஹமது இபுராஹிம், துணைத்தலைவர் முஹமது சுல்தான், செயலர் ஜாகிர் ஹூசைன், தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவின் தொடர்ச்சியாக வரும் 18 மாலை 5.30 மணியளவில் கொடியிறக்கப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவடைகிறது.

You may have missed