May 3, 2026

மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு… 24ல் ஓட்டு எண்ணிக்கை…

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது எழுந்த புகார்கள், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள மக்ராத் பஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவுபெற்றது. இங்கு வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 அன்று நடைபெற உள்ளது. இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்ற பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றது. ஆனால் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் காரணமாக வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஃபால்டா தொகுதிக்கு உட்பட்ட ஹசிம்நகர் கிராமத்தில், கடந்த 29 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குற்றம் சாட்டி, பாஜக கொடிகளை ஏந்தியிருந்த பல பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக சாலைகளை மறித்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் நெருங்கிய உதவியாளரான உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் இஸ்ராஃபில், தாக்குதல் நடக்கும் என எச்சரிக்கை விடுத்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஃபால்டா தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டன்கள் டேப் கொண்டு மறைக்கப்பட்டதாகவும், வாக்குச்சாவடி ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் குவிந்தன. ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், ஃபால்டா தொகுதியில் உள்ள துணை வாக்குச்சாவடிகள் உட்பட அனைத்து 285 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மே 21 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை புதிய வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் 144-ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில், 2026 ஏப்ரல் 29 அன்று பெருமளவிலான வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது கடுமையான தேர்தல் விதிமீறல்கள் மற்றும் ஜனநாயக செயல்முறைக்கு ஊறு விளைவித்தல் ஆகியவை நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு, துணை வாக்குச்சாவடிகள் உட்பட அனைத்து 285 வாக்குச்சாவடிகளிலும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் திங்கட்கிழமை (மே 4) அன்று எண்ணப்படும் நிலையில், மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் மட்டும் மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு மே 24 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும்.