முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து இளம்பெண் சரமாரி வெட்டி கொலை:

பல்லாவரம் அருகே இன்று அதிகாலை தோழிகளுடன் வீட்டில் தூங்கிய இளம்பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பெங்களூருவை சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜஸ்வந்த் (9), யாத்திகா (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 2 மாதங்களாக தனது மகள் யாத்திகாவுடன் அனகாபுத்தூர் சத்யா நகரில் வாடகை வீட்டில் ரேஷ்மா வசித்து வந்தார். இந்த நிலையில், ரேஷ்மாவின் அத்தை மகனான விஜி என்பவர் அடிக்கடி அவரை சந்தித்து பேசி பழகி வந்துள்ளார். இதனிடையே, இருவர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்த விஜி, ரேஷ்மாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, “நீ என்னுடன் வாழவில்லை என்றால், யாருடனும் வாழ முடியாது” என விஜி மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த ரேஷ்மா, அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியான மரியா மற்றும் அவரது சகோதரி ஜெனிபர் ஆகியோரை துணைக்கு அழைத்து வீட்டில் தூங்கியுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை ரேஷ்மா வீட்டிற்கு வந்த விஜி, கதவை திறக்குமாறு பலமாக தட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ரேஷ்மா உள்ளிட்ட 3 பேரும் கதவை திறக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜி, வீட்டின் ஜன்னல் வழியாக கையை உள்ளே நுழைத்து கதவை திறந்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர், மறைத்து கொண்டு வந்திருந்த பெப்பர் ஸ்பிரேயை 3 பேரின் முகத்தில் ஸ்பிரே செய்துள்ளார். 3 பேரும் மயங்கிய நிலையில் கத்தியால் ரேஷ்மாவின் கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார். இதில், படுகாயமடைந்த ரேஷ்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தோழிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, கொலை செய்யப்பட்ட ரேஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பிய விஜியை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கு கள்ளத்தொடர்பு காரணமா? அல்லது சொத்து தொடர்பான பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் நடந்த கொடூர கொலை சம்பவம் பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.