இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 16 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம்:

முகாமில் சித்ரவதை அனுபவிப்பதாக அதிர்ச்சி வீடியோ

இலங்கைச் சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 16 பேர் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் வெளிச்சிறை முகாமில் சித்ரவதை அனுபவிப்பதாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு, சகமீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கிறது. இவ்வாறு கைதாகும் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றதால் கடும் சிறை தண்டனையுடன், பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர், பாம்பன் மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு, வெளிச்சிறை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மீனவர்கள் விடுவிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் கடந்தும் அவர்களை தாயகம் அனுப்புவதற்கு இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது: இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் நாங்கள் சிறையில் இருப்பதுபோல்தான் இருக்கிறோம்.

வெளிச்சிறை முகாமில் நெருக்கமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். சாக்கடை ஓடும் பகுதியில் தங்க வைத்துள்ளதால் கொசுக்கடியால் தோலில் தடுப்புகள் ஏற்பட்டு சரியான தூக்கமின்றி அவதிப்பட்டு வருகிறோம். மேலும் இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. சரியான நேரத்திற்கு உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. சிறை அதிகாரியிடம் ஏன் எங்களை இந்தியாவிற்கு அனுப்பவில்லை? என்று கேட்டால் அலட்சியமாக பார்க்கின்றனர்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ பதிவு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு 16 மீனவர்களும் தாயகம் திரும்ப உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.