திருநெல்வேலி:
விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தேனி செல்ல தயார் நிலையிலிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற அலுவலர்கள் அதிரடியாக ஜப்தி செய்தனர்.
விபத்தும் நீதிமன்றத் தீர்ப்பும்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி சிவகாமி செல்வி. இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தார்.
இதுதொடர்பாக, திருநெல்வேலி சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் சிவகாமி செல்வி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ரூ.10,28,462 நஷ்டஈடாகவும், வழக்குச் செலவு மற்றும் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 13,49,020/- வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.
நிறைவேற்றுதல் மனு & ஜப்தி உத்தரவு:
நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டும், இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகம் செலுத்தாமல் தாமதப்படுத்தி வந்தது. இதையடுத்து, சிவகாமி செல்வி தரப்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, தொகையை ஈடுசெய்யும் வகையில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து பறிமுதல்:
நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கறிஞர்கள் ஸ்ரீவை.ரமேஷ், லெட்சுமணன் மற்றும் கோர்ட்டு அமீனா ஆதிமூலம் ஆகியோர் நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்றனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான, நெல்லையிலிருந்து தேனி செல்லவிருந்த அரசுப் பேருந்தை அவர்கள் ஜப்தி செய்தனர். பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டு, பேருந்து நீதிமன்றத்திற்கு இயக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் நெல்லை பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More Stories
எலும்பை உடைத்திடுவேன்னு பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சிறை! கொன்னுடுவேன்’னு மிரட்டிய அமைச்சருக்கு பதவி நீடிப்பா? த.வெ.க ராஜகுரு நீக்கத்தால் வெடித்த புதிய சர்ச்சை!
எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: அடுத்த மாதம் முதல் சில ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்!
தமிழக அரசுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.64,945 கோடி வருவாய் – மத்திய தணிக்கை துறை அறிக்கை வெளியீடு!