எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: அடுத்த மாதம் முதல் சில ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்!

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக, அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.840 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இரும்பு நடை மேம்பாலம் அமைப்பு:

இந்த புதிய பாலம் 18 மீட்டர் அகலத்துடனும், 120 மீட்டர் நீளத்துடனும் அமைக்கப்படுகிறது. இதற்காக 500 டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்பட்டு வருகின்றன. காந்தி இர்வின் சாலை பகுதியில் உள்ள நடைமேடை 1 முதல் 5 வரை ஏற்கெனவே இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, எழும்பூர் ரெயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் இருந்து, மின்சார ரெயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11-வது நடைமேடைகள் வரை இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதனால் எழும்பூர் வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ரெயில் சேதிகளில் மாற்றம்:

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “நடை மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக, எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும், மின்சார ரெயில்களை நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்குவது குறித்தும் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடை மேம்பாலம் அமைக்கும் பணி அடுத்த மாதம் முதல் அல்லது 2-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதால், அப்போதே இந்த ரெயில் சேவை மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.