வரும் 21ம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வுக்கு பதிவு செய்துள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 3ம் தேதி நடந்த இளநிலை நீட் நுழைவுத்தேர்வின் போது வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 22.7 லட்சம் மருத்துவப் படிப்பு மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வரும் 21ம் தேதி (நாளை மறுநாள்) மறுதேர்வு நடத்த முடிவு செய்தது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உத்தரப்பிரதேசத்தில் இருந்து மட்டும் 3,56,291 (15.7 சதவீதம்) மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர், இது அனைத்து மாநிலங்களை விடவும் அதிகப்படியான எண்ணிக்கையாகும். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 2,22,905 (9.8 சதவீதம்) மற்றும் ராஜஸ்தான் 2,03,470 (8.9 சதவீதம்) மாணவர்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளன.இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே மொத்த பதிவில் 34.4 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. பீகார் (1,56,061), கர்நாடகா (1,45,466) மற்றும் தமிழ்நாடு (1,42,489) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.
இந்த 6 மாநிலங்கள் மட்டும் ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 54 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மண்டல வாரியான கணக்கீட்டின்படி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், அரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 8 இந்தி பேசும் மாநிலங்கள் ஒட்டுமொத்த மாணவர்களில் 44 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
அதே சமயம் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 5 தென் மாநிலங்களின் பங்களிப்பு 23.8 சதவீதமாக உள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பதிவுகள் லட்சத்தீவு (141), டாமன் மற்றும் டையூ (666) மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் (882) பதிவாகியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் 9,475 மாணவர்களுடன் முன்னிலையில் இருக்க, அதனைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் (4,921), திரிபுரா (4,684), மேகாலயா (4,164) மற்றும் நாகாலாந்து (4,128) ஆகிய மாநிலங்கள் உள்ளன என்று தரவுகள் கூறுகின்றன.

More Stories
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு:
தீப்பெட்டி கேட்பதாக நடித்து துணிகரம்’ காம கொடூரனுக்கு தர்ம அடி..!
மனைவியை கட்டிப்போட்டு அடித்து, சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்..!!!