நாமகிரிப்பேட்டை: திருமணப் பரிசாக தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான ஒன்றை வழங்க விரும்பிய பொறியியல் பட்டதாரி ஒருவர், நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அசோக் சரவணன் (32), பொறியியல் பட்டதாரி. இவருக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா (எ) வர்ஷினி என்பவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்கு உலகில் யாரும் வழங்காத ஒரு தனித்துவமான திருமணப் பரிசை அளிக்க அசோக் சரவணன் திட்டமிட்டார். இதற்காக லண்டனில் வசிக்கும் தனது சகோதரியின் உதவியுடன், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நிலவில் நிலம் வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் ரூ.23,000 செலுத்தி நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை அவர் வாங்கியுள்ளார். நிலம் வாங்கியதற்கான 10 பக்க அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் அந்நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது.
இதுகுறித்து அசோக் சரவணன் கூறியதாவது:
“என் வருங்கால மனைவிக்கு இதுவரை யாரும் கொடுக்காத ஒரு வித்தியாசமான பரிசைக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் மூலம் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன். மேலும், எதிர்காலத்தில் நிலவுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தால், நிலம் வாங்கியுள்ள தங்களுக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.”
திருமணத்திற்கு முன்பாக வருங்கால மனைவிக்காக நிலவில் நிலம் வாங்கியுள்ள இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!