April 21, 2026

எப்.ஐ.ஆர் நகலை நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: பொதுமக்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலைப் பெற நீதிமன்றங்களை அணுகலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிதம்பரம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தவிர, மற்ற வழக்குகளின் எப்.ஐ.ஆர் நகல்களை பொதுமக்கள் இணையதளத்தில் பார்க்கும் வசதி முன்பு இருந்தது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள ‘சிசிடிஎன்எஸ் 2.0’ திட்டத்தின்படி, புகார்தாரர் மற்றும் விசாரணை அதிகாரியால் மட்டுமே எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களும், வழக்கறிஞர்களும் வழக்கை பற்றி உடனே தெரிந்துகொள்ள முடியாமல், முன்ஜாமீன் போன்ற சட்ட நடவடிக்கைகளை எடுக்க தாமதம் ஏற்படுகிறது. எனவே, வழக்கமான வழக்குகளின் எப்.ஐ.ஆர் நகல்களை மீண்டும் ஆன்லைனில் வெளியிட உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதிஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பின்வரும் உத்தரவை பிறப்பித்தது:

“எப்.ஐ.ஆர் நகல்களை புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெற்றுக்கொள்ள ஏற்கனவே வசதிகள் உள்ளன. ஒருவேளை மூன்றாம் தரப்பினர் எப்.ஐ.ஆர் நகலைப் பார்க்கவோ அல்லது பெறவோ விரும்பினால், அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகி சான்றொப்பமிட்ட நகலைப் (Certified Copy) பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறி அந்த மனுவை முடித்து வைத்தனர்.