October 27, 2026

மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை: தலைமைப் பொறியாளர் உட்பட 10 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மதுரை:

மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் டெண்டர் ஒதுக்கீடு செய்வதில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்புத் துறை) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில், தலைமைப் பொறியாளர் ஆர்.ராமசாமி உட்பட 10 அரசு அதிகாரிகள் மற்றும் 4 ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் தொடர்பாக லஞ்சம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, உரிய கணக்குகள் மற்றும் ஆவணங்கள் இன்றி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.35 லட்ச ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்குச் சொந்தமான 3 அசல் பதிவேடுகள் கைப்பற்றப்பட்டதோடு, வழக்கில் தொடர்புடைய 14 பேரிடமிருந்தும் எழுத்துப்பூர்வ வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

வழக்கில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:

இந்த வழக்கில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ஆர்.ராமசாமி, உதவி செயற்பொறியாளர்கள் வி.எஸ்.மணியன், எம்.பாலமுருகன், கே.மயிலேறிநாதன், தொழில்நுட்ப உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 10 அரசு அதிகாரிகளும், இவர்களுடன் தொடர்பில் இருந்த 4 ஒப்பந்ததாரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சூரிய கலா தலைமையில் இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.