October 28, 2026

அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி கருத்து!

மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளுக்கே சாதகமாக அமையும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுரை | அக்டோபர் 13, 2026

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் ஏற்படும் காலதாமதம், பொதுமக்களின் மருத்துவச் சேவையைப் பாதிப்பதுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் செயலாகவும் அமைவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கதிர் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் செயல்படும் கேத் ஆய்வகத்திற்குத் தேவையான மருத்துவக் கருவிகள் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கான நிதி ஒப்புதல் பல மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக இதய நோயாளிகளுக்குத் தேவையான பரிசோதனைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் சிகிச்சை அளிப்பதும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, இதயவியல் துறை பரிந்துரைத்துள்ள மருத்துவ உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதா? நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை உபகரணங்களை வாங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அரசு நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தாமல் காலதாமதம் செய்வது, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மறைமுகமாக வழிவகுக்கும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை பாதிக்கும்

மேலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை, அரசு மருத்துவர்கள் தாங்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பும் சம்பவங்களும் நடைபெறுவதாக நீதிபதிகள் விசாரணையின்போது குறிப்பிட்டனர்.

இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்தால் அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்