தமிழ்நாடு உள்பட பல மாநில சாலைகளில் தொழிலதிபர்களை கடத்தி கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.1.26 கோடி ரொக்கம், கார்கள், கத்திகளை பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம்தேதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை, கொள்ளை கும்பல் வழிமறித்தது. காரில் வந்த 2 பேரை கடத்தி ரூ.2.8 கோடியை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி, மாமில்லபள்ளி அருகே ரூ.3 கோடியுடன் சென்ற ஒருவரின் காரை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்தனர்.
இதுகுறித்த புகார்களின்பேரில் எஸ்பி சதீஷ்குமார் தலைமையில் 10 தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பெங்களூரு-கோரண்ட்லா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆசிரமத்தில் பதுங்கியிருந்த கொள்ளை கும்பல் தலைவன் சிரில்மேத்யூ மற்றும் ஷியாபுதீன், கரிபால் ஆசிப்அகமது, ஷரத், அப்பு, காந்த், அபுநிஷாத், நிஷாத், முனீர், ஷினோஜ் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதுகுறித்து எஸ்.பி.சதீஷ்குமார் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் கார்களில் செல்பவர்களை கும்பல் வழிமறித்து பணத்தை கொள்ளையடித்து வருவதாக புகார்கள் வந்தது. இதுகுறித்து தனிப்படை அமைத்து கண்காணித்தோம்.
கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் சிக்னல்கள் குறித்து ஆய்வு செய்ததில் கொள்ளை கும்பல் போலி பதிவெண்கள் கொண்ட கார்கள், போலி ஆவணம் பயன்படுத்தி சிம்கார்டுகள் வாங்கி பயன்படுத்தியதும், சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் பணம் செலுத்தாமல் ரொக்கமாக பணம் செலுத்தியதும் தெரியவந்தது. குறிப்பாக கர்னூல், மதனப்பள்ளி, பெங்களூரு, சேலம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை கும்பல் கேரளாவை சேர்ந்த சிரில் மேத்யூ தலைமையிலான குழுவினர் என கண்டறியப்பட்டது. சிரில்மேத்யூ, பெரிய வணிக குடும்பத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
கொரோனாவின்போது வணிகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடனில் சிக்கிய அவர், 21 பேர் கொண்ட கும்பலை உருவாக்கி, தேசிய சாலைகளில் பெரும் பணத்துடன் செல்பவர்களை கடத்தி கொள்ளையடித்து, அந்த பணத்தில் கடனை அடைத்துள்ளார். ஆனால் இந்த கொள்ளையில் சிரில் மேத்யூ நேரடியாக ஈடுபடாமல் நேபாளத்தில் தங்கி, விஓஐபி தகவல் தொடர்பு ஏற்படுத்தி கும்பல் மூலம் கொள்ளையடித்து வந்துள்ளார்.
இந்த கொள்ளை கும்பல் ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 26 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த கார்கள், மீட்பு வாகனங்கள், 13 செல்போன்கள், 3 கத்திகள், பெப்பர் ஸ்ப்ரே, போலி வாகன பதிவு எண்கள், முகக்கவசங்கள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலில் மீதமுள்ள 11 பேரை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
திருப்புவனம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது கும்பல்:
கோவை விமான நிலைய பெண் அதிகாரி தற்கொலை:
தென்னிந்திய நடிகர் நடிகைகளுக்கு பாலிவுட்டில் மரியாதை கிடையாது: நடிகை சிம்ரன் வேதனை…