“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.
சட்டம் – ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.
மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.
மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.
மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் – ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.
மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.
மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.
மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

More Stories
சேலத்தில் பணியின்போது ஏட்டு சீருடையில் வந்து மது வாங்கும் வீடியோ வைரல்:
திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ திரையிடலுக்கு கடைசி நேரத்தில் தடை.. சென்னையில் வெடித்த சர்ச்சை!
ரூ.5.29 கோடி வங்கி மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர், தனியார் நிறுவன அதிபருக்கு 7 ஆண்டு சிறை …