அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கொடுத்த காணிக்கை திருடப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஒவ்வொரு நாளும் விசாரணையில் பல கூடுதல் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் குற்றவாளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மோதலே மெகா திருட்டை அம்பலப்படுத்தியுள்ளது.. தற்போது இந்த வழக்கைச் சிறப்பு விசாரணைத் தனிப்படை தீவிரமாக விசாரித்து வருகிறது. டின்னு யாதவ் உட்பட மொத்தம் 30 நபர்கள் இந்த விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்தவுடன், டிஜிட்டல் சான்றுகளையும், திருடப்பட்ட பணத்தின் தடயங்களையும் அழிக்கக் குற்றவாளிகள் தீவிரமாக முயன்றுள்ளனர். விசாரணை நடப்பதைத் தெரிந்து கொண்ட உடனே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது செல்போனில் இருந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் டேட்டாவை முழுமையாக அழித்துள்ளனர். சிலர் தங்களது செல்போனை முழுமையாகப் பார்மேட் செய்து சாட்சியங்களை மறைக்க முயன்றனர். இருப்பினும் போலீசார் சிசிடிவி காட்சிகள் உட்பட இதர எலக்டிரானிக் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்..
இந்த வழக்கில் இதுவரை அவிநாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம் சங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் ரமாசங்கர் என்கிற டின்னு யாதவ் ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் பணம் மற்றும் நகைகளை எண்ணும் பணியில் நேரடியாக ஈடுபட்டவர்கள். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் விசாரணை அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகிறார்கள். பல மடங்கு எகிறிய சொத்து மதிப்பு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இந்த நபர்கள் புதிதாக வாங்கிய சொத்துக்களின் பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். அனுகல்ப் மிஸ்ரா ராமர் கோயில் அறக்கட்டளையில் பணியில் சேர்ந்த பிறகு, அவரது குடும்பத்தின் வாழ்க்கை முறை முற்றிலும் ஆடம்பரமாக மாறியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர் மட்டுமின்றி இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரது சொத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பெருமளவிலான சொத்துக்களைச் சேர்த்திருப்பது விசாரணை அமைப்புகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் திருட்டுப் பணத்தைக் கொண்டு நிலங்கள், வீட்டுமனைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற மிக விலையுயர்ந்த சொத்துக்களை அவர்கள் வாங்கியுள்ளனர்.
ராமர் கோயில் உண்டியலில் இருந்து சுமார் 7.75 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இதுவரை 80 லட்ச ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள எட்டு ஊழியர்களும் உண்டியல் பணத்தைத் திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது கோயிலின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதனால் கோயில் கட்டுப்பாட்டு அறை பொறுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரிவான விசாரணைக்குப் பிறகு துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது

More Stories
வெள்ளை பவுடர்.. கைதேர்ந்தவர் அமைச்சர் சரத்!” – கமிஷனர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் புகார்!
ஊர் பஞ்சாயத்தில் பெண் குத்திக்கொலை: கணவன் காவல் நிலையத்தில் சரண்…
கூட்டணியை வைகோ முறித்த 24 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த 150 மதிமுக மூத்த தலைவர்கள்…