மயிலாடுதுறை அருகே காதல் ஜோடி மர்மமான முறையில் இறந்தனர். ஆணவக்கொலை நடந்துள்ளதாக வாலிபரின் பெற்றோர் புகார் கூறி உள்ளனர். பெண்ணின் வீடு சூறையாடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பார்த்திபன்(19). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரும் அருகில் உள்ள சாந்தங்குடி கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் பிளஸ்2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி படிப்பை தொடர ஆயத்தமாகி வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதலிக்கும் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது.
இதனால் பார்த்திபன் வீட்டாரிடம் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். இதனால் இரு குடும்பத்துக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொறையாறு காவல் நிலையத்தில் பார்த்திபன் குடும்பத்தினர் நேற்று புகார் செய்தனர். அப்போது எங்களிடம் தகராறு செய்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சாந்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கீற்று கொட்டகை மாட்டு தொழுவத்தில் இன்று அதிகாலை பார்த்திபனும், அந்த பெண்ணும் தூக்கில் சடலமாக தொங்கினர். அப்போது வயலுக்கு அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து பொறையாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதால் சம்பவ இடத்தில் புதுப்பாளையம், சாந்தங்குடியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மர்மமாக இறந்த இருவரின் உறவினர்கள் திரண்டனர்.
அப்போது இருவரையும் பெண் வீட்டார் தான் ஆணவ கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக பார்த்திபனின் உறவினர்கள் குற்றம் சாட்டியதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் அறிந்ததும் பார்த்திபனின் உறவினர்கள் சாந்தங்குடியை சேர்ந்த அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை அடித்து நொறுக்கினர். மேலும் ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன் வீட்டு காம்பவுன்ட் சுவரை இடித்து தள்ளினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து ேபாலீசார் அங்கு விரைந்தனர். புதுப்பாளையம், சாந்தங்குடியில் பதற்றம் நிலவி வருவதால் இரு கிராமங்களிலும் மயிலாடுதுறை எஸ்பி (பொ) ஸ்டாலின் மேற்பார்வையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பார்த்திபனின் உறவினர்கள் கூறுகையில், இருவரும் காதலித்து வந்த விஷயம் தெரிந்ததும் பெண் வீட்டார் பிரச்னை செய்து வந்தனர். இதனால் அவர்கள் தான் 2 பேரையும் ஆணவக்கொலை செய்துள்ளனர். போலீசார் உரிய விசாரணை நடத்தி பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது ஆணவக்கொலை செய்யப்பட்டனரா என்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
சேலத்தில் பணியின்போது ஏட்டு சீருடையில் வந்து மது வாங்கும் வீடியோ வைரல்:
திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ திரையிடலுக்கு கடைசி நேரத்தில் தடை.. சென்னையில் வெடித்த சர்ச்சை!
ரூ.5.29 கோடி வங்கி மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர், தனியார் நிறுவன அதிபருக்கு 7 ஆண்டு சிறை …