கர்நாடகா மாநிலம் சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் நந்தி ஹில்ஸ்-க்கு அருகே உள்ள தங்கும்விடுதியில் (Home Stay) இளம்பெண் ஒருவர் சடலமாகவும் அவரது காதலன் காதலன் மயங்கிய நிலையில் ஒரே அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தங்கும் விடுதியில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே அறையில் மயங்கிய நிலையில் இருந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் பெங்களூருவில் உள்ள பனசங்கரி பகுதியை சேர்ந்த சாய் சுரபி எனத் தெரியவந்தது. அந்த அறையில் மயக்க நிலையில் இருந்த நபர் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சன்ஜீத் அலி என்பது தெரியவந்தது. சாய் சுரபி சத்யா சாய் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். பொறியியல் பட்டதாரியாக சஞ்சீத் அலி பெங்களூருவில் கார் டிரைவராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “நந்தி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் சனிக்கிழமை அலி வந்து தங்கியுள்ளார். அவருடன் சாய் சுரபி எப்போது வந்து இணைந்தார் எனத் தெரியவில்லை. திங்கட்கிழமை அவர்கள் அந்த அறையை காலி செய்திருக்க வேண்டும். ஆனால் அறையில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. விடுதி ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கும் தொடர்புக் கொண்டுள்ளனர். போன் ரிங் ஆகியுள்ளது ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து விடுதி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தற்கொலையா? கொலையா ?இதனையடுத்து சம்பவம் இடத்துக்கு போலீசார் விரைந்தனர். விடுதி அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சாய் சுரபி தரையில் உயிரிழந்த நிலையில் அலி மயக்கத்துடன் கிடந்துள்ளார். அந்த அறையில் ஒரு கயிறு, நிறைய மாத்திரைகள், மதுபாட்டில்கள் மற்றும் அந்த அறையில் வாந்தி எடுத்ததற்கான தடையங்கள் இருந்தது. அந்தப்பெண்ணின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை. ரத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால் இது தற்கொலையா? கொலையா ? என உறுதியாக எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் இந்த சம்பவத்தில் முழுமையான தகவல் தெரியவரும். அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளிக்கும் வாக்குமூலத்தில் தான் இந்த சம்பவத்துக்காக பின்னணி என்னவென்று தெரியவரும் ” என்றனர்.
அதேவேளையில் அலி தங்களது மகளை கொலை செய்திருப்பார் என சுரபியின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். சுரபியின் தாயார் கீதா பேசுகையில், “ அலி தான் தனது மகளை கொலை செய்திருக்க வேண்டும். அவர் தான் சுரபி போதை பழக்கத்தை அறிமுகப்படுத்தினார். அலி எனது மகளை ஏற்கனவே தாக்கியிருந்தார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தோம். 6 மாதங்களுக்கு முன்பு எனது மகள் மாயமானார். அப்போதும் நாங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்த சம்பவத்துக்கு பிறகு மைசூரில் இருந்த மறுவாழ்வு மையத்தில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு அவர் 6 மாதம் சிகிச்சை பெற்றார். அதன்பின்னரே பெங்களூரு திரும்பினார். எனது மகளை அலியிடம் இருந்து பிரித்து வைக்க எல்லா முயற்சியையும் மேற்கொண்டோம். என்றார்.

More Stories
சேலத்தில் பணியின்போது ஏட்டு சீருடையில் வந்து மது வாங்கும் வீடியோ வைரல்:
திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ திரையிடலுக்கு கடைசி நேரத்தில் தடை.. சென்னையில் வெடித்த சர்ச்சை!
ரூ.5.29 கோடி வங்கி மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர், தனியார் நிறுவன அதிபருக்கு 7 ஆண்டு சிறை …