September 9, 2026

கிருஷ்ணகிரி: அரசு துணை சுகாதார நிலையத்தை ஆக்கிரமிக்கும் சமூக விரோதிகள்! அச்சத்தில் பெண் செவிலியர்கள்!

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், வெப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகொத்தூர் கிராமத்தில் அரசு துணை சுகாதார சேவை மையம் இயங்கி வருகிறது. கிராமப்புற மக்களின் அவசர மருத்துவ தேவைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கும் இந்த மையம் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறது.

இரவு நேரங்களில் அத்துமீறல்:

​இந்தச் சுகாதார மையத்தை சுற்றி பாதுகாப்புக்காக மதில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் சுவரேறி குதித்து வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அங்கு அமர்ந்து மது அருந்துவதும், சீட்டு விளையாடுவதுமாகத் தொடர்ச்சியாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

​மது அருந்திவிட்டு காலி பாட்டில்கள் மற்றும் கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டுச் செல்வதால், மறுநாள் காலை பணிக்கு வரும் பெண் செவிலியர்களும், மருத்துவ சேவைக்காக வரும் தாய்மார்களும் பெரும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் அலட்சியம்:

​இதுகுறித்து அங்கு பணிபுரியும் பெண் செவிலியர்கள், உள்ளூர் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலரிடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் அளித்தும் இதுவரை எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மக்கள் பிரதிநிதிகள் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

உடனடி நடவடிக்கைக்குக் கோரிக்கை:

​”இரவு நேரத்தில் நடக்கும் இந்த சட்டவிரோத செயல்களால் பணிக்கு வரக்கூட பயமாக இருக்கிறது. பாதுகாப்பு இல்லாத சூழலில் நாங்கள் எப்படி அமைதியாகப் பணியாற்ற முடியும்?” என செவிலியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

​எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும், காவல் துறையும் உடனடியாக தலையிட்டு, சுகாதார மைய வளாகத்தில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சின்னகொத்தூர் கிராம பொதுமக்களும் செவிலியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may have missed