காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் 20-க்கும் மேற்பட்ட த.வெ.க நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து, சுவரில் முதல்வர் ஜோசப் விஜய் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து, தமிழக முதல்வர் விஜய் புகைப்படத்தை மாட்டி, தமிழக வெற்றி கழக (த.வெ.க) நிர்வாகிகள் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இச்சம்பவத்திற்கு அ.தி.மு.க தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அதில், காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே அரசு வகுப்பறையில் முதல்வர் விஜய் புகைப்படத்தை சுவரில் மாட்டி அதனை ரீல்ஸ் ஆக எடுத்து வெளியிட்ட த.வெ.க ஆச்சரியக்குறிகள்.. இதுதான் நீங்க சொன்ன அந்த மாற்றமா விஜய் சார்! நல்லா இருக்கு சார் உங்க மாற்றம் என்று அ.தி.மு.க விமர்சித்துள்ளது.
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை இச்சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் சுமார் 20-க்கும் மேற்பட்ட த.வெ.க-வினர் அத்துமீறிச் சென்று, முதல்வர் விஜய் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அரசுப் பள்ளிகளுக்குச் சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் அவை தரமிழந்து போயுள்ளன. தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு, பள்ளிகளின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், த.வெ.க-வினரின் இதுபோன்ற செயல்பாடுகள் அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
தாங்கள் ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளுக்குள் சென்று வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை முதலமைச்சர் விஜய்யே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம். எனவே, மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதல்வர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, த.வெ.க நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசும் காணொலி வெளியாகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பரப்புரையின்போது சிறார்களிடம், வீட்டிலுள்ள பெரியவர்களைத் த.வெ.க-வுக்கு வாக்களிக்கச் சொல்லுமாறு வாக்குக் கேட்ட முதல்வர் விஜய்யின் அணுகுமுறை, தற்போது அவரது கட்சி நிர்வாகிகளால் பள்ளிகளுக்குள்ளும் கொண்டு செல்லப்படுவது அரசியல் மாண்புக்கும் கல்விச் சூழலுக்கும் எதிரானது. தலைவர்களின் வரலாற்றையும் சாதனைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு.
அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை? முதல்வர் விஜய், கல்விக் கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் மாநாட்டுத் திடல்கள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள். பள்ளிகள் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் புனிதமான இடங்கள்; உங்கள் புகழ்பாடும் விளம்பரப் பொதுக்கூட்ட மேடைகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்?
த.வெ.க ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த த.வெ.க நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது.
சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும். எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்

More Stories
போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை…
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
வீடு புகுந்து மீனவர் கழுத்தறுத்துக் கொலை!