திருச்சி பெரியகடை வீதியில் பட்டப்பகலில் நகைப் பட்டறை உரிமையாளர், அவரது உதவியாளரைத் தாக்கி ரூ.1.49 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை 4 பேர் கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மெயின்கார்டுகேட் பெரிய கடைவீதி பகுதியில் உள்ள பெரிய செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உதய்(36). தங்க நகை மதிப்பீட்டாளராக உள்ள இவர், தங்க நகைகளை வாங்கி உருக்கி கட்டித் தங்கமாக விற்கும் தொழிலும் ஈடுபட்டுள்ளார். இவரது நகைப்பட்டறையில் நித்தின் (19) என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையி்ல், பட்டறைக்கு வந்த 4 பேர், தங்கக்கட்டி வாங்குவது போல பேசி நித்தின், உதய் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், உதய்யை கழிப்பறையில் வைத்து பூட்டினர். நித்தினை நாற்காலியில் உட்கார வைத்து கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர்.
பின்பு அங்கிருந்த உருக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ தங்கக் கட்டியை கொள்ளையடித்தனர். மேலும், அங்கிருந்து சிசிடிவி கேமராக்களை உடைத்து ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துக் கொண்டு தப்பினர்.
அதன்பின் கழிப்பறைக் கதவை உடைத்து கொண்டு வெளியே வந்த உதய், கோட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், தங்கக் கட்டியை கொள்ளையடித்த 4 பேரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். கொள்ளைபோன தங்கத்தின் மதிப்பு ரூ.1.49 கோடி என கூறப்படுகிறது.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்