தஞ்சாவூர் / நீலகிரி: தஞ்சாவூர் மற்றும் நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இருவேறு இடங்களில் பொதுமக்கள் மீது வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மொத்தம் 7 பேரை கைது செய்துள்ளனர்.
தஞ்சையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 2 வாலிபர்கள் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் தேவராயன்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (21), ஆகாஷ் (21) ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கீழவழுத்தூர் வெள்ளாளர் தெரு வழியாக அதிவேகமாகச் சென்றுள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனத் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அங்கிருந்த சிலர் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் மற்றும் ஆகாஷ், தங்களது வீட்டிற்குச் சென்று நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துவந்து, கோயிலில் நின்றிருந்த பொதுமக்கள் மீது வீசிவிட்டுத் தப்பினர். அந்த வெடிகுண்டு கோயில் சுவரில் மோதி பலத்த சத்தத்துடன் வெடித்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சக்திவேல், ஆகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பந்தலூரில் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கும்பல் கைது
இதேபோன்று நீலகிரி மாவட்டம் பந்தலூரில், 16 வயது சிறுமியிடம் தகாத முறையில் பேச முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை ஊர் பொதுமக்கள் தட்டிக்கேட்டு எச்சரித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், ஊர் மக்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பி ஓடியது. இச்சம்பவம் தொடர்பாக பந்தலூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக யோகேஸ்வரன் (28), நவீன் (25) ஆகிய இருவரைப் பிடித்த போலீசார், தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராகுல் (20), ராஜேஸ்கண்ணா (22), தீபக் (19) ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

More Stories
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ரூ.20,000 கடனுக்காக தாய், சேய் உயிரிழப்பதா? – கொத்தடிமை முறையை ஒழிக்க வேல்முருகன் ஆவேசக் கோரிக்கை!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!