சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை …

திருச்சி மாவட்டத்தில் மது கொடுத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த மாரிசெல்வன் 14 வயது சிறுமி ஒருவரை ஊரை சுற்றி காட்டுவதாகக் கூறி, தனது காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.  காரில் அழைத்துச் சென்ற அந்த நபர், குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து சிறுமியை மயக்கமடைய செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வேறொரு பகுதியில், காரில் ஏறிய 3 இளைஞர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் சுய நினைவை இழந்த சிறுமியை சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்மந்தை காலனி அருகே சுற்றித்திருந்த மாரி செல்வனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்தனர். தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

“திருச்சி  காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.

சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுமியின்  உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.