மதுரை மாவட்டத்தின் வனப்பரப்பளவு 26,795.59 எக்டர் கொண்டது. இதில், மதுரை, சோழவந்தான், உசிலம்பட்டி சரகங்கள் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளாவும், திறந்தவெளி காடுகளை கொண்ட பகுதிகளாகவும் உள்ளன. இவற்றில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் வேலிகள் இன்றி திறந்தவெளியில் இருப்பதால் மனித நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழையும் மர்மநபர்கள் சிலர், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், வனப்பகுதிக்குள் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரித்து வனப்பகுதியின் பாதுகாப்பு முழுவதும் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து வனப்பகுதியை பாதுகாக்க கம்பி வேலிகள் அமைக்கும் பணிகளில் மாவட்ட வனத்துறை ஈடுபட்டு வருகிறது.
இதன்படி முதற்கட்டமாக மதுரை-நத்தம் சாலையில் உள்ள உசிலம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 1.25 கி.மீ, தூரத்திற்கும், கிளுவமலை பகுதியில் 750 மீட்டர் தூரத்திற்கும் சேர்த்து ரூ.70 லட்சத்திற்கு தேவைப்படும் இடங்களில் சங்கிலி தொடர் அமைப்பிலும், மற்ற இடங்களில் இடைவெளிவிட்டும் கம்பி வேலிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், உசிலம்பட்டி சரகத்தில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில், கிளுவமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டபின் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Stories
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு…
ஹோம் டூர் வீடியோவால் வந்த வினை… நகை மற்றும் பணம் கொள்ளை…
ரத்தக்கறை படிந்த சுத்தியலுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்த நபர்…