சென்னை: திமுக கட்டமைப்பில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், கட்சியை மறுசீரமைக்கும் வகையிலும் முக்கிய கட்சிப் பதவிகளுக்கு வயது வரம்பு மற்றும் முறை வரம்புகளை நிர்ணயித்து திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைச் செயற்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய தீர்மானங்கள் மற்றும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
- மாவட்டச் செயலாளர்கள் வரம்பு:
- மாவட்டக் கழகச் செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் (முதலில் 2 முறை என தீர்மானிக்கப்பட்டு, பின்னர் 3 முறையாக திருத்தப்பட்டது).
- மாவட்டச் செயலாளருக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இனி கட்சியில் ‘மாநகரச் செயலாளர்’ என்ற தனிப் பொறுப்பு இருக்காது.
- கழக மாவட்டங்கள் மறுசீரமைப்பு:
- இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 110 கழக மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட உள்ளது. எஞ்சிய ஒரு தொகுதி இருப்பின், அதே வருவாய் மாவட்டத்தின் மற்றொரு கழக மாவட்டத்துடன் இணைக்கப்படும்.
- கிளை & வட்டக் கழகங்களுக்கான வயது வரம்பு:
- கட்சியில் புது ரத்தம் பாய்ச்சும் நோக்கில், கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆகவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பில் இருக்க முடியும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- மாநகர, நகர, பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்கலாம்).
- ஒன்றியம், நகரம் & பகுதிக் கழகங்கள்:
- பேரூர் கழகம், பகுதி கழகம், நகரக் கழகம் மற்றும் ஒன்றியக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்க அனுமதிக்கப்படுவர்.
- சராசரியாக 30,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகமும், 40,000 வாக்காளர்களுக்கு ஒரு நகரக் கழகமும் அமைக்கப்படும்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
கழகத் தலைவர் 110 புதிய மாவட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன், 15 நாட்களுக்குள் மாவட்டச் செயற்குழுக்களைக் கூட்டி ஒன்றியம், நகரம், பகுதி மற்றும் வட்டக் கழகங்களைப் பிரிக்கும் பணிகளை முடிக்க தலைமை அறிவுறுத்தியுள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!