மதுரை:
போக்சோ மற்றும் சில குறிப்பிட்ட உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் தவிர்த்து, பிற வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
திருநெல்வேலியைச் சேர்ந்த ரெஜினா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவித்திருந்ததாவது:
“முன்பு பெண்கள் மீதான வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் போன்ற வழக்குகளைத் தவிர்த்து, பிற அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளையும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணையவழியில் பார்க்கும் வசதி இருந்தது.
ஆனால், தற்போதைய ‘சிசிடிஎன்எஸ் 2.0’ திட்டத்தின் கீழ், புகார் அளித்த நபர் மற்றும் விசாரணை அதிகாரி மட்டுமே எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இதனால், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தங்கள் மீதான வழக்கின் விவரங்களை அறிய முடியாமல் போவதோடு, முன்ஜாமீன் உள்ளிட்ட அவசர சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் தவிர, மற்ற வழக்குகளின் எப்.ஐ.ஆர் நகல்களைப் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆன்லைனில் பார்வையிடும் வசதியை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.”
காவல்துறை விளக்கம் & நீதிமன்ற உத்தரவு:
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்:
- எப்.ஐ.ஆர் நகலைப் புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் பார்வையிடுவதற்கான வசதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
- போக்சோ மற்றும் சில குறிப்பிட்ட உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் தவிர, மற்ற அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!