லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அண்ணன், தம்பி சடலங்கள் மீட்கப்பட்டது. இதில் ஒரு சடலத்தில் தலை இல்லை. உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த ஆதிகுடி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் 30 அடி ஆழ கிணறு உள்ளது. பயன்பாடு இல்லாமல் இருக்கும் இந்த கிணற்றில் சுமார் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீரில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் மிதக்கின்றன.
இந்நிலையில் இந்த கிணற்றிலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் நேற்று மாலை சென்று பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் அழுகிய நிலையில் 2 ஆண்களின் உடல்கள் மிதந்தன. உடல்கள் தலைகுப்புற கிடந்தன. அதில் ஒரு உடல் தலையின்றி கிடந்தது. கிணற்று மேட்டில் 2 கைலி, 2 டிசர்ட், 2 ஜோடி செருப்புகள், ஒரு செல்போன், அரிவாள், கடப்பாரை ஆகியவை கிடந்தன.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி 2 உடல்களை இரவு 11 மணிக்கு மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது உடல்கள் அழுகி இருந்தது. இவர்கள் இறந்து ஒன்றரை மாதத்துக்கு மேல் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அங்கு கிடந்த செல்போன் மற்றும் அப்பகுதியில் சமீபத்தில் மாயமானவர்கள் பட்டியலை எடுத்து போலீசார் விசாரித்தனர். இதில் சடலமாக மிதந்தவர்கள் கடலூரை சேர்ந்த ராஜா மகன்கள் வெற்றிமணி(35), வீரமணி(32) என தெரியவந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட கைலி, டிசர்ட் உள்ளிட்ட பொருட்களை போட்டோ எடுத்து இருவரின் உறவினருக்கும் போலீசார் அனுப்பி வைத்து இறந்து கிடந்தது அவர்கள் தான் என உறுதிப்படுத்தினர். சகோதரர்கள் இருவரும் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பச்சாம்பேட்டை கிராமத்தில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். வெற்றிமணிக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கடலூரில் வசித்து வருகின்றனர். வீரமணியின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அண்ணனுடன் இருந்து வந்தார்.
அண்ணன், தம்பி இருவரும் கடந்த மே 5ம் தேதி ஊருக்கு செல்வதாக செங்கல் சூளை உரிமையாளரிடம் கூறி விட்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஊருக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த வெற்றிமணியின் மனைவி மாரியம்மாள் மே 9ம் தேதி கடலூர் மற்றும் லால்குடி போலீசில் கணவர், கொழுந்தன் மாயமானமாக புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடினர். இந்நிலையில் அவர்கள் பச்சாம்பேட்டையில் வேலை செய்த இடத்திலிருந்து 30கி.மீ. தூரம் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அண்ணன், தம்பிக்கு கடன் தொல்லை உள்ளது. மேலும் கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருந்தது. சடலம் கிடந்த தோட்டத்தில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கஞ்சா வாங்க அண்ணன், தம்பி இந்த தோட்டத்துக்கு வந்திருக்கலாம். அப்போது யாருடனாவது தகராறு ஏற்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் எது உண்மை என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன், தம்பி சடலங்கள் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிணற்றில் மீட்கப்பட்ட 2 உடல்களும் உறுதியாக இல்லாமல் கொழகொழவென இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடும் துர்நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு போராடி உடல்களை மீட்டனர். மிகவும் அழுகி இருந்ததால் ஒரு தலை மட்டும் கழன்று கிணற்றுக்குள்ளேயே விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் இன்று தீயணைப்பு வீரர்கள் மீண்டும் கிணற்றில் இறங்கி தலையை தேடி வருகின்றனர். உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், அது யாருடைய தலை என உடனடியாக தெரியவில்லை. அதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
மது அருந்திவிட்டு அவமானப்படுத்திய கணவரை ஆத்திரத்தில் கொளுத்திகொலை செய்த மனைவி…
பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தி தவெகவினர் அட்ராசிட்டி:
கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் மாயம்: கலெக்டரிடம் 4 கிராம மக்கள் புகார்…