நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நகரத் தலைவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள எரசக்கநாயக்கனூர் சாலை ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சிங்கராஜ் (44). இவர், சின்னமனூர் நகர பாஜக தலைவராக உள்ளார். இவர், அதே பகுதியில் ‘வேலவன் பைனான்ஸ்’ என்னும் நிதி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதன்மூலம் பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகிறார். இந்த நிலையில், சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான 36 வயது பெண், தனது தோழியுடன் இந்த மாத தொடக்கத்தில் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு சிங்கராஜின் நிதிநிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது சிங்கராஜ் அவர்கள் இருவரையும் அமர வைத்து கடன் தொடர்பான நிபந்தனைகளை தெரிவித்துள்ளார். மேலும், பேசிக்கொண்டே நேரத்தை கழித்துள்ளார். அப்போது பெண்ணின் தோழிக்கு போன் வரவே, அவர் நிதி நிறுவனத்தின் வெளிப்புறம் சென்று பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தை பயன்படுத்திய சிங்கராஜ், தனியாக அமர்ந்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கடன் வேண்டாம் என அவரை தள்ளிவிட்டு வெளியில் வந்து தோழியுடன் ஊருக்கு சென்றுவிட்டார்.
இதனால், மனஉளைச்சல் அடைந்த அந்தப் பெண் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சின்னமனூர் போலீசில் அந்தப் பெண் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாஜக நிர்வாகியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More Stories
தவெக எம்எல்ஏ மீது பண மோசடி புகார்..
எந்த தவறும் செய்யாமல் பழிக்கு மட்டும் பாஜக ஏன் ஆளாக வேண்டும்? கஸ்தூரி கேள்வி…
மதுரையில் ரூ.43 கோடியில் 5 தளங்களுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை மையம்…