கடம்பூர் ராஜு, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இன்று தவெகவில் இணைந்தனர். அவர்களின் ஆதரவாளர்கள் பின்வாசல் வழியாக தவெக அலுவலகத்தில் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில், தவெக ஆட்சியமைக்கத் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. 59 இடங்களில் வென்ற திமுக எதிர்கட்சி என்ற இடத்தைப் பெற்றுள்ளது. அதேநேரம், 47 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக எதிர்கட்சி என்ற இடத்தைக் கூட அடையமுடியாமல் போனது.
இது அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு தரப்பு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின்போது, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், அதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக அதிமுக அணிகள் மீண்டும் இணைக்கப்பட்டது.
தொடர்ந்து, சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாகத் தவெகவில் இணைந்தனர். மேலும், சில அதிமுக நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணையும் நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. சில நாள்களுக்கு முன்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, “90% அதிமுகவினர் நம்பக்கம் வருவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்தச் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று, தங்களைத் தவெகவில் இணைத்துக்கொண்டனர்.
குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஆனந்தன், கடலூர் எம்.சி.சம்பத், திருச்சி சிவபதி ஆகியோர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் எம்எல்ஏகள் கோவிந்தசாமி, சங்ககிரி சுந்தரராஜ், வீரபாண்டி ராஜமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதன்ராஜ், வில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சிவகாசி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், ஆற்காடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ஆர்.சீனிவாசன், அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் எம்.முருகன் உள்ளிட்டோரும் தங்களைக் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
இன்று காலை 10 மணிக்கு இணைப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவினர் 10 மணிக்கு முன்னதாகவே பனையூர் தவெக அலுவலக வாயிலில் திரண்டனர். ஆனால், 11 மணிவரை தவெக அலுவலக வாயில் திறக்கப்படவில்லை. அதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிமுகவினர் வெளியில் காத்துக்கிடந்தனர்.
அதேநேரம், தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு மொத்தம் இரண்டு வாயில்கள் உள்ளன. இரண்டு நுழைவாயில்களிலும் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைய வந்தவர்களின் ஆதரவாளர்கள் அனுமதிக்கபடவில்லை. அதனால், அதிமுகவில் இருந்து தவெகவில் இணைய வந்தவர்கள் பின்பக்க கதவை தள்ளி உள்ளே நுழைய முயன்றனர்.
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வந்தவர்களின் ஆதரவாளர்கள் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றதால் பின்பக்க நுழைவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், தியாகராய நகர் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதியும் தவெகவில் இணைந்தார். ஏற்கனவே அவருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத அதிருப்தியில் திமுகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது

More Stories
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது இன்று கோர்ட்டில் விசாரணை!
கீழடியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வின்போது ட்ரோன் சர்ச்சை; தடையை மீறி தவெகவினர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு
எடப்பாடியைக் காலி செய்துவிட்டு அதிமுக பொதுச்செயலாளராக ஆர்.பி.உதயகுமார் முயற்சி: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!