ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும், ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற ஆன்மீக சிறப்பும் கொண்ட திருப்பங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியாக முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போதைய எம்.எல்.ஏ வி.வி.ராஜன்செல்லப்பா செல்வாக்கு, அதே நேரத்தில் பா.ஜ.க கட்சியின் அதிகரித்த அரசியல் நடவடிக்கைகள் ஆகியவை இந்தத் தொகுதியை ‘ஹாட் சீட்’ ஆக மாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ராஜன் செல்லப்பாவின் செல்வாக்கு தொடருமா?
அதிமுக-வின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் மேயராகவும் இருந்த ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் நீண்டகால அரசியல் செல்வாக்கைக் கொண்டவர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் பலத்த போட்டியை மீறி சுமார் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
தொகுதியில் குடிநீர் வசதி, சாலை மேம்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் அவர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உள்ளூர் அளவில் அவருக்கு ஆதரவு நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி காரணமாக தொகுதி பங்கீட்டில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பா.ஜ.க-வின் ஆன்மீக அரசியல் வியூகம்
கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் பகுதியில் பா.ஜ.க தனது அரசியல் செயல்பாடுகளை அதிகரித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், மார்ச் 2026 தொடக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ததும் அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
கூட்டணி பேரம்: அ.தி.மு.க-வுக்கு சிக்கலா?
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே கூட்டணி மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க தரப்பு, திருப்பரங்குன்றம் ஒரு முக்கிய ஆன்மீகத் தலம் என்பதையும், சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளையும் முன்னிறுத்தி இந்தத் தொகுதியை கேட்பதா தகவல்கள் வெளியாகின்றன.
அதே நேரத்தில், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க தரப்பு தயக்கம் காட்டுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலை முன்னிட்டு முக்கிய எதிர்பார்ப்புகள்
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.
ராஜன் செல்லப்பா அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா?
கூட்டணி நிலைக்காக வேறு தொகுதிக்கு மாற்றப்படுவாரா?
ஒருவேளை பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால் யார் வேட்பாளராக வருவார்?
இதற்கிடையில், இந்த கூட்டணி அரசியல் இழுபறியை பயன்படுத்தி தி.மு.க அல்லது அதன் கூட்டணி கட்சிகள் பலமான வேட்பாளரை நிறுத்தலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.
அரசியல் அரங்கம்
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தற்போது ஒரு சாதாரண தேர்தல் களமாக இல்லாமல், உள்ளூர் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆன்மீக அரசியல் வியூகங்கள் மோதும் முக்கிய அரசியல் அரங்காக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தத் தொகுதியின் அரசியல் நிலை எவ்வாறு மாற்றும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.






