September 9, 2026

பைக்கின் பின்னால் காதலி அமர்ந்திருந்தால் இளைஞருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்பு: மதுரை உயர்நீதிமன்றக் கிளை கருத்து

மதுரை:

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் காதலி அமர்ந்து செல்லும்போது இளைஞருக்கு இயல்பாகவே உற்சாகம் ஏற்படும் என்றும், விபத்துக்கு இளைஞரின் கவனக்குறைவும் ஒரு காரணம் எனக் கூறி இழப்பீட்டுத் தொகையைக் குறைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் (19) என்ற இளைஞர், கடந்த 2018-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வீரபாண்டி – வலையபட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். வாகனத்தின் பின் இருக்கையில் அவரது காதலிஅமர்ந்திருந்தார். அப்போது எதிரே வந்த வேன் மீது பைக் மோதியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; அவருடன் பயணித்த இளம்பெண் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த கோபாலின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்

மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

  • காப்பீட்டு நிறுவனம் தரப்பு: “விபத்து நிகழ்ந்ததற்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரின் கவனக்குறைவும் முக்கியக் காரணம். எனவே, கீழமை நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையைக் குறைக்க வேண்டும்.”
  • மனுதாரர் தரப்பு: “கீழமை நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நியாயமான இழப்பீட்டை வழங்கியுள்ளது. அதில் தலையிடத் தேவையில்லை.”

நீதிபதிகளின் தீர்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:

“விபத்து அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது. 19 வயது இளைஞரின் பைக் பின் இருக்கையில் அவரது காதலி அமர்ந்து செல்லும்போது, வாகனத்தை ஓட்டுபவருக்கு இயல்பாகவே உற்சாகம் ஏற்படும்.

சம்பவ இடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்ததில் வேன் தனது சரியான பாதையில்தான் வந்துள்ளது. ஆனால், பைக் தவறான பக்கத்தில் (சாலையின் வலதுபுறம்) சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விபத்துக்கு உயிரிழந்த இளைஞரின் கவனக்குறைவும் 25% காரணமாக அமைந்துள்ளது.”

இளைஞரின் பங்களிப்பாக 25 சதவீதத்தை நிர்ணயித்த நீதிபதிகள், அதற்கேற்ப இழப்பீட்டுத் தொகையைக் குறைத்து காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You may have missed