சென்னை: மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி முதல்வர் அலுவலகத்தை புதுப்பிப்பதும், இடமாற்றம் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாஜக நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:
“100 நாள் ஆட்சியில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். ஆனால், தற்போது அவரது அலுவலகத்தை தரம் உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரூ. 5 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் முதல்வர் அலுவலகத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, ‘மாணிக்கம் அண்ட் கம்பெனி’ என்ற நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்திற்கு எந்த விதிமுறைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்பதை தமிழக அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜோதிடர்களின் அறிவுரைப்படியே முதல்வர் அலுவலகம் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஜோதிடர்களை நம்பி ஆட்சி நடத்துவதுடன், மக்கள் வரிப்பணத்தை இதற்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
முறைகேடாக வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, இது தொடர்பான முழு விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது நிர்வாகிகளோ ஊழலில் ஈடுபட்டால், அவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் என்பது ஒரு புற்றுநோய் போன்றது; மக்கள் வரிப்பணத்தை இதுபோன்று வீணடிப்பதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது” என்று ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!