சென்னை:
அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமச்சந்திரன் என்பவர், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் விசாரணை முடிந்து 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; துறை ரீதியான குற்றக்குறிப்பாணையும் வழங்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக மனுதாரர் தொடர்ந்து இடைநீக்கத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்” என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், லஞ்ச முறைகேடு விசாரணை நிலுவையில் உள்ளதால் அவர் பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணை மற்றும் துறை ரீதியான விசாரணை இரண்டையும் ஒன்றாகக் கருத முடியாது என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி ஒருவரை நீண்டகாலம் இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், பணியிடை நீக்கத்தை மாதக்கணக்கில் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி மனுதாரரின் இடைநீக்க ரத்து உத்தரவைப் பிறப்பித்ததோடு, அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் மீண்டும் அரசு பணியமர்த்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

More Stories
எலும்பை உடைத்திடுவேன்னு பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சிறை! கொன்னுடுவேன்’னு மிரட்டிய அமைச்சருக்கு பதவி நீடிப்பா? த.வெ.க ராஜகுரு நீக்கத்தால் வெடித்த புதிய சர்ச்சை!
நெல்லையில் பரபரப்பு: நஷ்டஈடு தராததால் திருநெல்வேலி – தேனி செல்ல இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்றம் அதிரடி ஜப்தி !
எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: அடுத்த மாதம் முதல் சில ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்!