நெல்லையில் பரபரப்பு: நஷ்டஈடு தராததால் ​திருநெல்வேலி – தேனி செல்ல இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்றம் அதிரடி ஜப்தி !

திருநெல்வேலி:

விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தேனி செல்ல தயார் நிலையிலிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற அலுவலர்கள் அதிரடியாக ஜப்தி செய்தனர்.

​விபத்தும் நீதிமன்றத் தீர்ப்பும்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி சிவகாமி செல்வி. இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தார்.

​இதுதொடர்பாக, திருநெல்வேலி சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் சிவகாமி செல்வி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ரூ.10,28,462 நஷ்டஈடாகவும், வழக்குச் செலவு மற்றும் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 13,49,020/- வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.

​நிறைவேற்றுதல் மனு & ஜப்தி உத்தரவு:

நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டும், இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகம் செலுத்தாமல் தாமதப்படுத்தி வந்தது. இதையடுத்து, சிவகாமி செல்வி தரப்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, தொகையை ஈடுசெய்யும் வகையில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

​பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து பறிமுதல்:

நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கறிஞர்கள் ஸ்ரீவை.ரமேஷ், லெட்சுமணன் மற்றும் கோர்ட்டு அமீனா ஆதிமூலம் ஆகியோர்  நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்றனர்.

​அங்கு நிறுத்தப்பட்டிருந்த திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான, நெல்லையிலிருந்து தேனி செல்லவிருந்த அரசுப் பேருந்தை அவர்கள் ஜப்தி செய்தனர். பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டு, பேருந்து நீதிமன்றத்திற்கு இயக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

​இச்சம்பவம் நெல்லை பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may have missed