நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: ஊழியர் அதிரடி இடைநீக்கம் -உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவு

கடலூர்: கடலூர் அருகே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கடரமணன், சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் பி. வெங்கடரமணன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது, விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்படுகிறதா என அமைச்சர் விசாரித்தார்.

அப்போது, நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 முதல் ரூ. 60 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள, அங்கிருந்த பதிவேட்டில் இருந்த விவசாயி ஒருவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் பேசினார். அந்த விவசாயியும் லஞ்சம் வாங்கும் தகவலை உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர் வேல்முருகனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்கிறதா என்பதைக் கண்டறிந்து, லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.