கர்நாடகாவைச் சேர்ந்தவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? – தமிழக அரசுக்கு வேல்முருகன் கேள்வி

சென்னை: டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அதிர்ச்சியளிக்கும் நியமனம்: ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணா, டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், அம்மாநில அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களுடன், குறிப்பாக கர்நாடக முக்கியத் தலைவர்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், இந்த நியமனம் சனநாயக நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும்: டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் அலுவல் சார்ந்த பதவி மட்டுமல்ல; அது இந்தியாவின் அதிகார மையத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களின் குரலைத் தடையின்றி ஒலிக்கச் செய்யும் மிக முக்கியப் பொறுப்பாகும்.

மாநில உரிமைகளில் சவால்கள்: தற்போதைய சூழலில், காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்ற நீர் உரிமைகளும், மொழி உரிமை, முறையான நிதிப் பகிர்வு, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற மாநில உரிமைகளும் எனத் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பல சவால்களைச் சந்தித்து வருகின்றன.

இத்தகைய சூழலில், தமிழக உரிமைகளுக்காக டெல்லியில் வலிமையாகக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பில், கர்நாடக மாநிலத் தொடர்புகளைக் கொண்ட ஒருவரை நியமித்திருப்பது நியாயமற்றது. எனவே, இந்த நியமனத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.