சேலத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை…

சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த சந்தனக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் – கவிதா தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். நெசவு தொழில் செய்துவரும் தம்பதி, வறுமையில் வாடிய நிலையில், அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவிதாவுக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், வறுமை காரணமாக இந்த குழந்தையை வளர்க்க முடியாது எனக் கருதிய தம்பதி, பிறந்து ஏழு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் சிலம்பரசன், குழந்தையை விற்ற தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், குழந்தையை வாங்கிய தம்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் குழந்தையுடன் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து, இரு தம்பதிகளையும் விசாரித்து வரும் காவல் துறை, குழந்தை விற்ற சம்பவத்தில் இடைத்தரகர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறது.