மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 51 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவிடைமருதூர் கதிராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுசித்ரா(26). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு இரண்டாம் ஆண்டு இளங்கலை உடற்கல்வி படித்து வந்தார். நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழன்(30).

சுசித்ராவும், முத்தமிழனும் ஏற்கனவே பள்ளியில் ஒன்றாக படித்து வந்த நிலையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாளடைவில் முத்தமிழனின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுசித்ரா தனது படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை தொடர்ந்து உள்ளார். இதற்கிடையே சம்பவத்தன்று சுசித்ரா வழக்கம் போல் தனது வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலுக்கு தோழிகளுடன் திரும்பி உள்ளார்.

அப்போது வழியில் இடைமறித்த முத்தமிழன், சுசித்ராவிடம் ஏன் என்னுடன் பேசுவதில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் முத்தமிழன் கத்தியை காட்டி மிரட்டியதுடன் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவர் மீது வீசி உள்ளார். இதில் மாணவி சுசித்ரா படுகாயம் அடைந்தார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன், மாணவி சுசித்ரா மீது ஆசிட் வீசிய முத்தமிழனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.51 ஆயிரத்து 500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து முத்தமிழன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.