38 நாட்களில் 150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்: – இ.பி.எஸ்

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சியில் நடக்கும் நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போதைப்பொருள் விற்பனை முன்பைவிட அதிகரித்துள்ளது. த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு 38 நாட்களில் 150 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக,  அ.தி.மு.கபொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான சட்ட-ஒழுங்கு மற்றும் வாக்குறுதி மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேட்டியளித்து உள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெண்களுக்குப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் எனப் பல வீர வசனங்கள் பேசப்பட்டன என்று சாடிய இபிஎஸ், த.வெ.க அரசு பொறுப்பேற்ற இந்த 38 நாட்களில் மட்டும் நிகழ்ந்துள்ள அதிர்ச்சியூட்டும் குற்றப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார். த.வெ.க ஆட்சிக்கு வந்த 38 நாட்களில் மட்டும் 150 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே குறுகிய காலத்தில் 130 கொலைகள் அரங்கேறியுள்ளன. பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்தக் குற்றங்களாக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் முன்பு இருந்ததைவிட தற்போது போதைப்பொருள் புழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பாலியல் தொல்லைகளைத் தடுக்க இந்த அரசு கொண்டுவந்த ‘சிங்கப்பெண் சிறப்பு படைக்கே’ பாதுகாப்பு அளிக்க இன்னொரு படை அமைக்க வேண்டிய அவல நிலைதான் இந்த ஆட்சியில் நிலவுகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

தேர்தல் நேரத்தில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்க பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி என்றும் த.வெ.க தலைவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது வெறும் 75,000 ரூபாய் வரை கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவித்து விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளது

முறையான நீர் மேலாண்மை இல்லாததால் இந்த ஆண்டு ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி த.வெ.க அமைச்சரவையில் இணைந்துள்ள அமைச்சர்களைப் பயன்படுத்தியாவது, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் பேசி உரிய பங்கு நீரைப் பெற்றிருக்கலாம். ஆனால், இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் டெல்டா விவசாயிகளும், பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழந்து கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் 436 திட்டங்கள் குறித்த எந்தவொரு நிதி ஒதுக்கீட்டு விவரமும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. மேலும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் மக்களைக் கவர அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பெண்களுக்கு ₹2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை, மாதந்தோறும் ஒருமுறை மின்கட்டணக் கணக்கீடு போன்ற எந்தவொரு கவர்ச்சிகரமான அறிவிப்பும் தற்போதைய ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. வாக்குகளைப் பெறுவதற்காகக் கவர்ச்சியாகப் பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவெக அரசு மக்களை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டது மட்டுமின்றி, ஆங்காங்கே மின்வெட்டையும் பரிசாக அளித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.