திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிமாரிமருது, தனது சிறுவயதில் எதிர்கொண்ட பொருளாதார சிரமங்களை மறக்காமல், இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற ஆதிமாரிமருது, 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். கூலி தொழிலாளியான அவரது தந்தை, அவர் முதலாமாண்டு மருத்துவ மாணவராக இருந்தபோதே உயிரிழந்தார். குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தபோதிலும், பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு புத்தகங்கள், விடுதி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து படிப்பை தொடர வழிவகுத்தனர்.
தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு, நண்பர்களான சுந்தர் மற்றும் சந்துரு ஆகியோரின் ஆதரவுடன் அம்பாசமுத்திரம் வண்டிமரிச்சம்மன் கோவில் அருகே “ஆதித் கிளினிக்” என்ற மருத்துவமனையை தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் ஆதிமாரிமருது கூறுகையில், “என் சிறுவயதில் வீட்டில் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவச் செலவுக்காக சில நூறு ரூபாய் கூட திரட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏழை குடும்பங்கள் எதிர்கொள்ளும் அந்த வேதனையை நான் நேரில் அனுபவித்தவன். அதனால்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி சிகிச்சை அளித்து வருகிறேன்” என்றார்.
மாணவர்களுக்கான இலவச சிகிச்சை மட்டுமின்றி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு பரிசோதனை போன்ற விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்களையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். தற்போது அரசு மருத்துவப் பணிக்கான தேர்வுகளை எழுதியுள்ள அவர், எதிர்காலத்தில் பெரியவர்களுக்கும் இலவச மருத்துவ சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கனவை பகிர்ந்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டன் கூறுகையில், “எங்கள் குடும்பம் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாக்டர் ஆதிமாரிமருதுவிடம் சிகிச்சை பெற்று வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிப்பது மிகவும் பாராட்டத்தக்கது. நோயாளிகளிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வார். தேவையான நேரங்களில் சிறப்பு மருத்துவர்களிடம் உடனடியாக பரிந்துரையும் செய்வார். பலமுறை கட்டணம் கொடுக்க முயன்றாலும், ‘குழந்தைகளுக்கு கட்டணம் வேண்டாம்’ என்று மறுத்துவிடுவார். அவருடைய மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மை அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளது” என்றார்.

More Stories
38 நாட்களில் 150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்: – இ.பி.எஸ்
கஞ்சா புகைத்ததால் விபரீதம்: போலீஸாரை கண்டு அச்சத்தில் ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழப்பு..
மனைவியுடன் தகராறு; மகளை கொலை செய்து காவலாளி தற்கொலை…