பகலில் ஆட்டோ ஓட்டுநராகவும், இரவில் ரயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் நபராகவும் வலம்வந்த நபரை தாம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கடந்த 15ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், 10 மணியளவில் சிக்னல் கோளாறு காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர்-பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு புறப்பட்ட ரயில் மெதுவாக இயக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்த ரயிலில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த அசுதா என்ற பெண் பயணி ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால், தனது இருக்கையிலிருந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் அந்த பெண் இருந்த பெட்டியின் நுழைவு வாயில் வழியே சென்று, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது சுதாரித்துக் கொண்ட அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த நபர் பெண்ணின் பாதி சங்கிலியை மட்டும் அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். அதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அப்பெண் சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று ரயில்வே போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது குறிப்பிட்ட அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரயில் சிக்னலில் எந்த ஒரு கோளாறும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. பிறகு ஏன் ரயில் நிறுத்தப்பட்டது என விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, ரயில்வே நிர்வாக அதிகாரிகளும் அங்கு ஏன் ரயில் நிறுத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது, ரயில் நிறுத்தப்பட்ட பகுதியில் உள்ள சிக்னலில் பச்சை நிற மின்விளக்கு, சட்டை துணியால் மறைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல, எதிர்த்திசையில் உள்ள தண்டவாளத்தில் இருக்கும் சிக்னலிலும் பச்சை நிற மின்விளக்கும் சட்டை துணியால் மறைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அடையாளம் தெரியாத அந்த நபர்கள், சிக்னலை துணியால் மறைத்துவிட்டு, ரயில் நின்ற உடனே அல்லது மெதுவாக செல்லும்போது பயணிகளிடம் இருந்து நகை, செல்ஃபோன் போன்ற பொருட்களை திருடி கொண்டு தப்பிச் செல்லும் கொள்ளை கும்பல் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, குமரேசன் மீது ஏற்கெனவே சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, ராயபுரம், பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில்வே காவல் நிலையங்களில் 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததும், குண்டர் சட்டத்தில் கைதாகி, தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும், குமரேசன் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும், இரவு நேரத்தில் ரயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் நபராகவும் வலம் வந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த குமரேசனை சுற்றி வளைத்து கைது செய்த தாம்பரம் ரயில்வே போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, அவரிடமிருந்த திருட்டு சங்கிலியை மீட்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக தாம்பரம் ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்

More Stories
திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை…
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பெண் யூடியூபர் பண மோசடி புகார்..
“முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால், தவெகவில் இணைந்தேன்”