September 23, 2026

ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி கைது…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், கன்னியாகுமரியைச் சேர்ந்த மிஃப்டின் என்பவரது லேப்டாப் திருடுபோயுள்ளது. இது குறித்து அவர் திருச்சி இரயில்வே போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த பரணிதரன், கே. கள்ளிக்குடியைச் சேர்ந்த ரோகன் தேவ் ஆகியோர் லேப்டாப்பைத் திருடியது தெரியவந்தது.

அவர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் லேப்டாப் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து லேப்டாப்பைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லேப்டாப்பைத் திருடிக் கைது செய்யப்பட்ட பரணிதரன், தமிழக வெற்றிக் கழகத்தில் மணிகண்டம் ஒன்றியச் செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாகப் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் கட்சியைச் சேர்ந்தவர்களே, பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், திருச்சியிலும் லேப்டாப் திருட்டில் த.வெ.க-வைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.