September 23, 2026

டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை அக்டோபர் முதல் வாரத்தில் உயர்வு

சென்னை: தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை, வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

காலி மது பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்வதில் நிலவிவரும் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை வாயிலாக மது பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.20 வரை விலை உயர்த்த சட்டத்தில் இடமிருந்தாலும், முதற்கட்டமாக ரூ.10 மட்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இதுவரை மதுக்கடைகளில் பாட்டில் விலையுடன் சேர்த்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையானது, காலி பாட்டிலை வாடிக்கையாளர்கள் மீண்டும் ஒப்படைக்கும்போது திருப்பி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய தீர்வையின் அமலாக்கத்திற்குப் பிறகு, மது பாட்டில்களின் விலை நேரடியாக ரூ.10 அதிகரிக்கப்படும். இதன் காரணமாக, இனி காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் கூடுதல் பணம் வசூலிக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்” என்றார்.

மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் இந்த புதிய விலை உயர்வு முறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.