கணவன் என்று பொய் சொல்லி அட்மிட்… சிசிடிவியால் அம்பலமான விபத்து நாடகம்: 

புதுச்சேரியில் திலகர் நகரை சேர்ந்தவர் 25 வயதான ராஜமாதங்கி. இவரின் கணவர் சரவணன் சென்னையில் தங்கி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார்.

புதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி ராஜமாதங்கி தலையில் படுகாயமடைந்த நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒருவர் அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் விசாரித்த போது, அவர் தனது கணவர் என்று ராஜமாதங்கி தெரிவித்துள்ளார்

முருகா தியேட்டர் அருகில் விபத்தில் சிக்கியதால் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார். அவரை பரிசோதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் 3 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். அதனால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், ராஜமாதங்கி தனக்கு உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்திருக்கிறார். உடனே, ராஜமாதங்கியின் தாயார் அவரை மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்தபோது உடல் முழுவதும் காயம் இருந்துள்ளது.

இதுகுறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராஜமாதங்கி இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது முருகா தியேட்டர் அருகே எந்த விபத்தும் நிகழவில்லை என தெரியவந்தது.

தொடர்ந்து ராஜமாதங்கியை அழைத்து வந்த வாகன எண், அவரை அழைத்து வந்தவர் யார்? என விசாரித்தனர். விசாரணையில் ராஜமாதங்கியை அழைத்து வந்தது சின்ன கோட்டகுப்பத்தை சேர்ந்த 29 வயதான சுரேந்திரன் என கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ராஜமாதங்கி திருமணத்துக்கு முன்பு பள்ளி பருவம் முதலே சுரேந்திரனை காதலித்த வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜமாதங்கியின் பெற்றோர், அவரை சரவணனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்குப் பின் சரவணன – ராஜமாதங்கி சென்னையில் வசித்து வந்தனர். அவரின் காதலன் சுரேந்திரன் சிங்கப்பூருக்கு வெல்டிங் வேலைக்கு சென்று விட்டார். சில மாதங்களுக்கு முன்பு அவர் சின்ன கோட்டகுப்பம் திரும்பியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்ததும் சுரேந்திரன், தனது முன்னாள் காதலி ராஜமாதங்கியுடன் தொடர்ந்து பழகியுள்ளார். அடிக்கடி இருவரும் சென்னை, புதுச்சேரியில் ஒன்றாக உலா வந்துள்ளார். இதை அறிந்த கணவன் சரவணன், ராஜமாதங்கியை கண்டித்துள்ளார்.  ஆனால், அவர்கள் சரவணனை சந்தித்து விவகாரத்து செய்யும்படி கெஞ்சியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சரவணன், தனது மனைவியை புதுச்சேரியில் உள்ள திலகர் நகரில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு சென்னை சென்றுவிட்டார். இது தனது காதலனை பார்க்க வசதியாகிப் போனதும் ராஜமாதங்கி அடிக்கடி சுரேந்திரனுடன் ஜோடியாக சுற்றியுள்ளார்.போன் செய்தவுடன் சுரேந்திரன் எடுக்காவிட்டால், அவரது வீட்டுக்கு சென்று தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று கடந்த 5ம் தேதி சுரேந்திரன் வீட்டிற்கு ராஜமாதங்கி சென்றுள்ளார் அடுத்தவரின் மனைவி இப்படி வரக் கூடாது என்று சுரேந்திரனின் தாயார் அவரை திட்டியுள்ளார். பதிலுக்கு ராஜாமாதங்கி வாக்குவாதம் செய்துள்ளார். அதை பாத்து ஆத்திரமடைந்த சுரேந்திரன், ரகசிய காதலியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதில் வலி தாங்க முடியாமல் ஓடும்போது கால்வாயில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அப்போது, சுரேந்திரன் தனது பெயரை மறைத்து ராஜமாதங்கியின் கணவன் சரவணன் எனக் கூறியதும் அம்பலமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோரிமேடு போலீசார் சுரேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருமணமான இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக கூறி நாடகமாடிய ரகசிய காதலன் சிசிடிவி மூலம் சிக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.